ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து பலானா நகரை நோக்கி ‘ஆன்டனோவ் ஆன்-26′ ரக பயணிகள் விமானம் நேற்றுமுன்தினம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பலானா நகர மேயர் ஓல்கா மொகிரோ உள்பட 22 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தனா்.
பலானா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாகவே, அந்த விமானத்துடனான தகவல் தொடா்பு துண்டானது. மேலும் ரேடாா் பாா்வையிலிருந்தும் அந்த விமானம் மறைந்தது. இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணிகள் திவிரமாக நடந்தன.
தேடுதலின் போது விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்றும் அதில் பயணித்த 28 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே மாயமான விமானம் , விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையில் மோதி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் இருள் சூழ்ந்ததால் நேற்றுமுன்தினம் இரவு நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் நேற்று காலை மீண்டும் தொடங்கின. அப்போது விபத்து நடந்த இடத்திலிருந்து 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய 9 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதில் சோகம் என்னவென்றால் யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை.