நாட்டின் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் பான் (Permanent Account Number) கார்டு, வருமான வரி செலுத்தல் முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கணக்குத் தொடங்குதல் வரை பல தேவைகளுக்கு இன்றியமையாததாக உள்ளது. ஒவ்வொரு நபருக்கும் அதிகபட்சமாக ஒரு பான் கார்டு மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், தற்போது பான் கார்டு தொடர்பாக மத்திய அரசின் புதிய அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மத்திய அமைச்சரவை சமீபத்தில் “பான் 2.0” எனப்படும் புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முக்கியமான மாற்றமாக, பழைய பான் கார்டுகளில் தற்போது கியூ ஆர் கோடு (QR Code) இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பான் கார்டின் அடையாளம் மேலும் தொழில்நுட்பமாக மாற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியான பிறகு, பான் கார்டு வைத்திருப்பவர்கள் “புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?” என்ற கேள்வியில் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதை தெளிவுப்படுத்தும் விதமாக வருமான வரித்துறையினர் விளக்கமொன்றை வெளியிட்டுள்ளனர்.
வருமான வரித்துறையின் விளக்கம்
பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து செயல்படலாம்.
புதிய கியூ ஆர் கோடு வசதியுடன் கூடிய பான் கார்டுகளை பெற விரும்புபவர்கள் மட்டும் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த மாற்றத்துக்காக கூடுதல் கட்டணமோ அல்லது ஆவணத் திரட்டலோ தேவையில்லை. இந்த சேவை முழுக்க இலவசமாகவே வழங்கப்படும்.
கியூ ஆர் கோடு கொண்ட பான் கார்டின் முக்கிய தன்மைகள்
புது பான் கார்டுகளில் உள்ள கியூ ஆர் கோடு, அதனை ஸ்கேன் செய்யும் நொடி நபரின் அனைத்து அடையாளத் தகவல்களையும் பாதுகாப்பாக வழங்கக்கூடியது. இதன் மூலம் பான் கார்டை துரிதமாக சரிபார்க்கும் திறன் அதிகரிக்கப்படும்.
உங்கள் பான் கார்டு புதுப்பிக்க வேண்டுமா?
வருமான வரித்துறையின் தகவலின்படி, இதற்கான அவசியமில்லை. பழைய பான் கார்டுகளை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து அதைப் பயன்படுத்தலாம். புதிய கியூ ஆர் கோடு வசதியுள்ள கார்டு வேண்டுமென்றே விருப்பமுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.