எங்களுடையது மூன்றாவது அணி அல்ல முதல் அணி என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தேர்தலில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் அவருடை கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா 40 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு 154 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக 70 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளன. இதில் விருகம்பாக்கத்தில் சினேகன், கோவை தெற்கில் கமல் ஹாசன், மயிலாப்பூரில் ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
நேற்று இரவு காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத் என்பவரை ஆதரித்து கமல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது காந்தி ரோடு அருகே அவருடைய காரை நோக்கி நீண்ட தலைமுடி வைத்திருந்த நபர் முன்னேறினார். அவரை கமல் ஹாசனின் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்களை எல்லாம் பொருட்படுத்தாமல் முன்னேறிய அந்த நபர் கமல் கார் மீது தாக்குதல் நடத்தினார். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த இளைஞரின் செயலால் கோபமடைந்த ம.நீ.ம தொண்டர்கள் சரமாரியாக அவரை அடித்து வெளுத்தனர். அந்த பகுதியில் கூச்சல் குழப்பம் நீடித்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார், வாயில் ரத்தம் கொட்டிக்கொண்டிருந்த அந்த இளைஞர் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததால் தான் அவ்வாறு நடந்து கொண்டார் எனக்கூறப்படுகிறது.