திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ஜனாதிபதி குறித்தான சர்ச்சை கருத்துக்கு முதல்வர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் அகில் கிரி. இவர் பாஜக எம்.எல்.ஏ வின் தொகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாஜக எம்.எல்.ஏ சுவேந்து அதிகாரி என்னுடைய தோற்றத்தை பற்றி கூறுகிறார், ஆனால் நாங்கள் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிட மாட்டோம் என கூறிய அவர் அதன்பின், அவர் ஜனாதிபதி பதவியை மதிக்கிறோம் ஆனால், உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என கேட்டுள்ளார்.
இவரின் இந்த பேச்சை அங்கிருந்தவர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். ஆனால், இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் அனைவரும் அகில் கிரிக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். அகில் கிரியின் பேச்சுக்கு மேற்குவங்கம் மற்றும் இன்றி ஒடிசாவிலும் எதிர்ப்புகள் கிளம்பின. அவர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அமைச்சரின் இந்த பேச்சுக்கு மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்ததோடு மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில், ஜனாதிபதி பற்றிய அகில் கிரியின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது.
அகில் செய்தது தவறு அவருடைய கருத்தை எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை எனவும் அவரின் சார்ப்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அகில் கிரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.