தலை தூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம்-ஒருவருக்கு காயம் இருவர் கைது!!

Photo of author

By Savitha

தலை தூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம்- ஒருவருக்கு காயம் இருவர் கைது!

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டதில் ஒருவர் காயமடைந்து இரண்டு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளில் கோடை விடுமுறை என்றாலே சிறுவர்கள் சாலையில் விளையாடுவதும் மாலை நேரங்களில் பட்டம் விடுவதும் என ஒரு மாத காலம் பொழுதை கழிப்பார்கள். ஆனால் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டால் மற்றவர்கள் கழுத்தை பதம் பார்க்கும் என்பதால் தமிழக அரசு மாஞ்சா கலாச்சாரத்தை தடை செய்து விற்பனை செய்யப்படும் நபர்களையும் பட்டம் விடும் நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஆதம்பாக்கம், கக்கன் நகரை, சேர்ந்த சுனில்குமார்(22) என்பவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சைதாப்பேட்டை, தாடண்டர் நகர் சிக்னல் அருகே பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல், சுனில் குமாரின் முகத்தில் பட்டு இரத்தம் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த சுனில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்து சம்பந்தப்பட்ட பிரவீன் (எ) லியோ( 21) மற்றும் தனுஷ்(19) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மாஞ்சா நூல் சுற்றப்பட்ட 1 லொட்டாய் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.