பிரச்சாரத்தின் போது நெஞ்சுவலியால் துடித்த மன்சூர் அலிகான்..பதறிய தொண்டர்கள்..!!
தமிழ் சினிமாவில் வில்லனாக மிரட்டி வரும் நடிகர் மன்சூர் அலிகான் அரசியலிலும் களம் கண்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மன்சூர் தோல்வியை தழுவிய நிலையில், இந்த முறை வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
முன்னதாக மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். அதிமுக உடன் கூட்டணி அமைத்தி இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்சூர் அலிகான் யார் என்ன என்பதை பார்க்காமல் வாய்க்கு வந்ததை ஊடகங்களில் பேசி விடுகிறார். அதனால் கட்சி நடத்துவதே சிரமமாக இருப்பதாக செயற்குழு சார்பில் விளக்கம் அளித்தனர். இதனையடுத்தே மன்சூர் அலிகான் இந்த தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி வேலூர் தொகுதியில் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து வந்தார்.
இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், வேலூர் குடியாத்தம் பகுதியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கும் நிலைக்கு சென்றார். இதனையடுத்து பதறிய அவரின் தொண்டர்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இப்போது வரை மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இருப்பினும் மன்சூர் அலிகானின் உடல்நிலை குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இதனால் அவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்களும், தொண்டர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.