1500 ரூபாய்காக மெக்கானிக் கொலை செய்யப்பட்ட உண்மை காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், பட்டாம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, இவர் அங்குள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அவர் மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது கண்டறியப்பட்டது.
அந்த ஆம்புலன்ஸின் பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முருகன் என்பவரை கைது செய்தனர். அப்போது அவர் சங்கரலிங்கத்தை கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் சங்கரலிங்கத்திடம் தனது டிவியை பழுது பார்க்க கொடுத்ததாகவும் ஆனால், பல நாட்கள் ஆகியும் அவர் டிவியை பழுது நீக்கி தராததால் தான் கொடுத்த 1500 பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
ஆனால், அவர் பணத்தை திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த முருகன் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது ஆம்புலன்ஸ் ஏற்றி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனை அடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் முருகனை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 1500 ரூபாய்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட சபவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.