மருத்துவ மாணவர்களிடம் பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: -மத்திய அரசு!
உக்ரைனில் தங்கி படித்துவந்த மாணவர்கள் அங்கு நடந்துவரும் போரின் காரணமாக, தங்கள் நாடுகளுக்கு திரும்ப செல்கின்றனர். இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றுள்ளனர். இந்திய மாணவர்கள் உக்ரைனில் போர் நடப்பதால், அங்கிருந்து தப்பித்து அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன் அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வெளிநாடுகளில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் அங்கே மருத்துவக் கல்வி முடித்து பயிற்சி மருத்துவம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, இந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியாவிலேயே தங்களின் பயிற்சி மருத்துவ படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக வெளிநாட்டில் படித்த மாணவர்கள் எஃப்.எம்.ஜி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, மாநில மருத்துவக் கவுன்சில்கள், தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் எஃப்.எம்.ஜி மருத்துவ தகுதித் தேர்வை நடத்தலாம். இதையடுத்து மாணவர்கள் 12 மாதங்களுக்கு பயிற்சி மருத்துவம் பயிலவோ அல்லது அவர்கள் ஏற்கெனவே முடித்ததிலிருந்து எஞ்சியுள்ள காலத்திற்கான பயிற்சி மருத்துவத்தை இங்கே பயிலலாம். இந்த மாணவர்களிடம் பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.