2011ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டமானது கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வரை திட்டம் கிடப்பில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் அதனை தற்போது திமுக அரசு முடிக்கும் எண்ணத்தில் கையில் எடுத்துள்ளது.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது கோவையுடன் புனே, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. புனே, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் ஆனது பயன்பாட்டிற்கு வந்து சில ஆண்டுகள் கடந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, “மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.” என்று கூறினார். 2013 ஆம் ஆண்டே ‘மெட்ரோ மேன்’ என்றழைக்கப்படும் ஶ்ரீதரன் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.
அதன் பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே அதிமுக ஆட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கோவையில் மெட்ரோ ரயில் தொடங்கப்படும்.” என்று மீண்டும் அறிவித்தார்.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து, “கோவையில் ரூ.6,683 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.” என அறிவித்தனர். எனினும் அதற்கான செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை.தற்பொழுது திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். மீண்டும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
கோவையில் ரூ.10,740 கோடி, மதுரையில் ரூ.11,360 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில் :-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கை ஏற்கனவே மத்திய அரசிடம் சமர்ப்பித்து விட்டோம்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரத் துறை முன்பு இத்திட்டம் குறித்து விவரிக்க உள்ளோம். அங்கு அதை ஆய்வு செய்துவிட்டு மத்திய அரசின் பொது முதலீட்டு வாரியத்துக்கு அனுப்புவார்கள். அதன் பிறகு மத்திய அரசானது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இச்சமயத்தில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டமானது வேகம் எடுத்துள்ளது. ஆனால் சேலம் மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் குறித்த எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக அமைந்துள்ளது.