மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!

Photo of author

By Mithra

மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு, பொதுமுடக்கம் என அடுத்தடுத்து போடப்பட்டு 2020ஆம் ஆண்டு முடங்கியது. ஆனால் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுமுடக்கமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் குறைந்ததால் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கம் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் சகஜமாக அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக கடந்த வாரம் ஆய்வில் தெரிய வந்தது. மேலும், உருமாறிய கொரோனா வைரசும் அதிகரித்து வருவதால் ஆய்வுகளை அதிகப்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு நடுவண் அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் மார்ச் 31-ஆம் தேதி வரை நடுவண் அரசு பொது முடக்கத்தை நீட்டித்தது. அதே நேரத்தில், நடுவண் உள்துறை செயலாளர் அஜய் பெல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அனைத்து மாநில அரசுகளும், கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆய்வுகளை அதிகப்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், நடுவண் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அஜய் பெல்லா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அதே நேரத்தில், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல எந்த தடையும் விதிக்க வேண்டியதில்லை, அதே நேரத்தில் பொதுமுடக்கத்தை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.