உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

Photo of author

By Anand

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்துள்ளது. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பதவியேற்றுள்ளார்.இவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் என்பதை அனைவரும் அறிவர்.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினின் மருமகனான சபரீசனை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசாக போட்டோ ஒன்றை வழங்கியுள்ளார்.பெரியார்,அண்ணா மற்றும் கலைஞருடன் ஸ்டாலின் இருப்பது போல பெயிண்டிங் செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் திருக்குறள் ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்பில் மகேஷ் உதயநிதிக்கு இந்த படத்தை பரிசாக வழங்கியது குறித்து திரைத்துறையில் உள்ள பிஆர்ஓக்கள் பலரும் ட்வீட் செய்துள்ளனர்.சீனியர் முதல் தற்போது வந்தவர்கள் வரை என அனைவரும் இந்த பரிசு வழங்கிய விவகாரத்தை ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர்.இதுமட்டுமில்லாமல் சினிமா விமர்சனம் செய்பவர்கள்,சினிமா வர்த்தகம் செய்பவர்கள் என அதிக பாலோவர்ஸ் கொண்ட பலரும் இதை பதிவிட்டிருந்தனர்.இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட  பிஆர்ஓக்கள்,திரை விமர்சனம் செய்பவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் புரமோஷன் ட்விட் செய்வது வழக்கமானது தான்.குறிப்பாக இது போன்ற விளம்பர பதிவுகளுக்கு குறைந்தது பத்தாயிரம் முதல் லட்சம் வரை கட்டணமாக வாங்குவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசு கொடுத்ததை எதற்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்ய வேண்டும் என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

இந்த பரிசு வழங்கியதை பணம் கொடுத்து விளம்பரம் செய்தார்களா? அல்லது கடந்த திமுக ஆட்சியில் நடந்தது போல திரைத்துறையை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.