பிரதமர் மோடியை சந்திக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்! நீட் தேர்வு விவகாரம் பேசப்படுமா?
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.உதயநிதி அவருடைய துறை சார்பாக சில கோரிக்கைகளை முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி போலவே சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துவது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் அனைவரும் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை டெல்லி தமிழ் சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ் கல்வி கழக நிர்வாகிகள் ஆகியோரை உதயநிதி மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து உரையாடினார். இரவு 7 மணி அளவில் பஞ்சாப் கவர்னர் பண்பாரளால் புரோகித் இல்ல திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
மேலும் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகின்றார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மத்திய விளையாட்டு துறை மந்திரி தாகூர், மத்திய ஊரக வளர்ச்சி துறை மந்திரி கிரிஜா சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து துறை தொடர்பாக பல்வேறு திட்டங்களை குறித்து பேச உள்ளார். மேலும் தமிழகம் சார்ந்த பல்வேறு திட்டங்கள், நீட் தேர்வு விவகாரம், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.