அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்! தே.மு.தி.க பொருளாளர் பேட்டி!
திமுக கட்சியின் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
மதுரையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க பொருளாளர் அவர்கள் விமானம் மூலம் மதுரைக்கு பயணம் செய்தார். மதுரை விமான நிலையம் வந்த இவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் “டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என்று பாஜக ஆட்சியின் போது கூறினார்கள். தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மேகதாது அணை கட்டுவது பற்றியே பேசுகிறார்கள். அணை கட்டுவதை தமிழகமும், தமிழர்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சனை இரண்டு மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு இதற்கு உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய நியாயத்தை வாங்கித் தரவேண்டும்.
திமுக கட்சியின் திராவிட மாடல் ஆட்சியில் வருமானவரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள். கடமையை செய்ய வந்த அதிகாரிகள் தங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என்று காவல்துறை கூறியது வேடிக்கையாக உள்ளது. காவல்துறை இன்று ஏவல் துறையாக மாறியுள்ளது. அதிகாரிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களைத் தான் கைது செய்ய வேண்டும். அப்போதுதான் கடமையை செய்ய வரும் அதிகாரிகளை தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்தது ஒட்டு மொத்த தமிழர்களுக்கு கிடைத்த பெருமை ஆகும். அதில் எதற்கு சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட பயணத்தில் 1000 கோடி ரூபாய்க்கு வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்க்கலாம். என்ன நடக்கிறது என்று” என அவர் கூறியுள்ளார்.