தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும்,தொடர்ந்து வழங்கப்படும். இது குறித்து தேவையில்லாமல் பதற்றம் வேண்டாம் என்று தமிழக மின்சார வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஆரம்பிக்கப்பட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை தமிழக மின்சார வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் மெகராஜ், ஈரோடு மண்டல தலைமைப்பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பி.தங்கமணி இது குறித்து கூறியதாவது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு மீட்டர் பொருத்தப்படும் என்று வெளியானது தவறான தகவல். தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இலவச மின்சார திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எண்ணமும் ஆகும்.
இந்நிலையில் தான் புதிய மின்சார திட்டம் அறிவிப்பு வந்தபோது கூட அது குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள இலவச மின்சார திட்டம் எந்த காரணத்தை கொண்டும் ரத்து செய்ய கூடாது என்றும் முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
தட்கல் முறையில் மின் இணைப்பு பெறுவோர்களுக்கு மட்டுமே ரீடிங் எடுப்பதற்காக மீட்டர் பொருத்தப்பட்டது. தற்போது அதற்கும் மீட்டர் பொருத்த வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் நிலத்தடி நீர் அதிக ஆழத்திற்கு சென்றதால் அதிக குதிரைத்திறன் உடைய மின் மோட்டார்களை பயன்படுத்தும் விவசாயிகள் இதற்காக விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை. மீட்டரும் வைக்கப்படாது. தமிழகத்தில் வழங்கும் இலவச மின்சார திட்டத்திலும் எந்த பாகுபாடும் இருக்காது என்றும் அவர் அப்போது தெரிவித்துள்ளார்.