2011ம் வருடம் முதல் 2021ம் வருடம் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. அந்த 10 வருடங்களும் திமுக எதிர்கட்சியாக செயல்பட்டு வந்தது. 2017 முதல் 2021 வரை தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது அதிமுகவை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக பாஜகவுக்கு அடங்கிப்போகும் அடிமைகள் என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு என்ன கொள்கை மற்றும் திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை கண்மூடித்தனமாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பதாக குற்றம் சாட்டினர். மேலும், சசிக்கலாவின் காலில் விழுந்து முதல்வரானவர் எனவும் விமர்சித்து வந்தார்.
மு.க.ஸ்டாலின் சொன்ன விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் பழனிச்சாமி. பாஜகவை பகைத்துக்கொள்ளக் கூடாது என அவர் எடுத்த முடிவால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானர். இதனால் பல விஷயங்களில் அவரின் இமேஜ் டேமேஜ் ஆனது. குறிப்பாக நீட் தேர்வை அனுமதித்தது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து 13 அப்பாவி மக்கள் இறந்து போனதை ‘டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்’ என சொன்னது, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் செக்யூரிட்டியை கொலை செய்து வீட்டில் இருந்த ஆவணங்களை சிலர் தூக்கி சென்ற விவகாரம் என பலவற்றிலும் பழனிச்சாமி பெயர் அடிபட்டது.
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். ஆனால், ஸ்டாலினை போல ஒரு சிறப்பான எதிர்கட்சி தலைவாக பழனிச்சாமி செயல்படவிலை. ஏனெனில், அந்த வேலையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்து கொண்டிருந்தார். இப்போது அடுத்த வருடம் தமிழ்நாட்டுக்கு சட்டமன்ற தேர்தல் வருகிறது. எனவே, அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி காயை நகர்த்த துவங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், டாஸ்மாக் ஊழலை கையில் எடுத்து அதுபற்றி விவாதிக்க வேண்டும் என சட்டசபையில் கேட்ட அதிமுகவின் கையில் ‘யார் அந்த தியாகி’ என எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் ‘தான் சிக்கியிருக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்க யாருடைய காலில் போய் விழுந்தாரோ. இதையெல்லாம் பார்த்து நொந்து போன நூடுல்ஸ் ஆகியுள்ள அதிமுக தொண்டர்கள்தான் தியாகிகளாக இருக்கிறார்கள்’ என பதிலடி கொடுத்தார்.