பதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி

0
176
MK Stalin - Online Tamil News
MK Stalin - Online Tamil News

பதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி

பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழக மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி? என திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று திமுக தலைவர் அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்திருக்கும் ஆளுநருக்கு, மேலும் தாமதம் செய்யாமல், உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்திட உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதில் “மயான அமைதி” காத்துவருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதற்குச் சற்றும் சளைத்திடாமல் ஆளுநரும் போட்டி அமைதி காக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உளப்பூர்வமாகக் கொடுத்த ஒத்துழைப்பைக் கூட நாகரீகம் இன்றி விமர்சனம் செய்யும் முதலமைச்சர், இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதற்குப் பிரதமருக்கோ அல்லது உள்துறை அமைச்சருக்கோ அரசியல் ரீதியாக எவ்வித அழுத்தமும் கொடுக்க ஏனோ அஞ்சுகிறார்.

கவுன்சிலிங் துவங்கப்பட்டு விட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கதி என்ன? ஏற்கனவே இரட்டை வேடம் போட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து “நீட்” தேர்வை, 2017 முதல் தமிழகத்தில் அனுமதித்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு மசோதாவையும் முதலமைச்சர் காற்றில் பறக்கவிடப் போகிறாரா? பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா முதலமைச்சர் பழனிசாமி?”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Previous articleஇரு நாட்டு உடன்படிக்கையை மீறி அத்துமீறலில் ஈடுபட்ட சிங்களப்படை! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்
Next articleபெண்கள் மனதில் இடம் பிடிக்க…! திருமாவளவன் கையில் எடுத்த மோசமான அரசியல் யுக்தி…!