பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றின் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதையடுத்து கடந்த மாதம் 25ஆம் தேதி, இந்தியாவில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல்கட்டமாக, சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்தது.
மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையவர்கள் எனவும் அறிவுறுத்தி இருந்தது. இதை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நேற்று தொடங்கியது.
அந்த வகையில் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 9 லட்சத்து 84 ஆயிரத்து 676 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும், மேலும் அனைத்து முன்களப் பணியாளர்களும் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.