இந்த வருடமும் மாணவர்கள் பள்ளிக்கு போக தேவையில்லை! ஆன்லைன் வகுப்பை தொடங்கி வைக்கும் முதல்வர்
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது காரணமாக கடந்த கல்வியாண்டு 2020-21 முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகள் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று குறையாமல் அதிகரித்து வந்ததன் விளைவாக, கடந்த கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
குறிப்பாக இதில் பொதுத்தேர்வை எழுத இருந்த மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் எவ்வாறு வழங்குவது எப்படி? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தற்போது ஓரளவு குறைந்து வந்தாலும், தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கையானது எதிர்பார்த்த அளவு குறையாமல் அதே அளவில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சூழலை உணர்ந்து, கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை போலவே இந்த கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே தொடங்கப்பட முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நிலையில் அரசு பள்ளி மாணவர்களைப் பொறுத்த வரையில், கடந்த கல்வியாண்டில் கல்வி தொலைக்காட்சி மற்றும் அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் சிலரால் வாட்ஸ்-அப் மூலமும் ஆன்லைன் வகுப்பு வழியாக பாடங்கள் நடத்தப்பட்டன.
அதேபோல் இந்த ஆண்டும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்த திட்டமிட்ட அரசு இன்று (சனிக்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் இதற்கான பணியை தமிழக மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
இந்த கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக நாள்தோறும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையும் இன்று வெளியிடப்படுகிறது.
மேலும் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும் மாணவர்கள் அதை புரிந்துகொள்ள பாடபுத்தகங்கள் தேவை என்பதால் அதற்காக விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்தப் பள்ளிகள் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.