அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் கண்காணிப்பு- மத்திய அரசு அறிக்கை!
மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தற்போது வரவிருக்கும் பண்டிகைக் காலங்களை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு ஏற்பட கூடிய சிரமங்களை தவிர்க்கவும், மத்திய அரசானது, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை மூன்று மாதங்களுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மக்களின் கூடுதல் தேவைகளைப் பூர்த்தி செய்ய, போதுமான உணவு தானியங்களின் இருப்பு மத்திய தொகுப்பில் இருப்பதையும், விலைகள் கட்டுக்குள் இருப்பதாகவும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
விலைவாசி உயர்வைத் தவிர்க்க மே 13ம் தேதி முதல் கோதுமைக்கும், 8 ம் தேதி முதல் அரிசிக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் மூலம் கோதுமை மற்றும் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகள் குறைந்துள்ளது. கோதுமை விலையானது கடந்த வாரத்தில் நிலையாக இருந்தது. விலைகளைக் கட்டுக்குள் வைக்க வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் மூலம் 80 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வெளிச்சந்தை விற்பனைக்கு மாற்றப்பட்டுள்ளது. கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன் தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.