கோலாகலமாக தொடங்கிய மூக்கன் தைப்பூச திருவிழா!! அரோகரா கோஷத்தால் அதிர்ந்த தென்காசி!!
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலமாக திருமலைக்குமாரசாமி திருக்கோவில் விளங்குகிறது. இத்திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருமலைக்குமாரசாமி திருமலையிலிருந்து அழைத்து வரப்பட்டு பண்பொழி நகரீஸ்வரமுடையார் திருக்கோவிலில் வைத்து பத்துநாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று அன்னக்கொடி ஏற்றப்பட்டு தைப்பூசத் திருவிழா தொடங்கியது.
நேற்றும் ஏழாம் திருநாளை முன்னிட்டு காலை திருமலையிலிருந்து சண்முகர் அழைப்பு நடைபெற்று மதியம் திருமலைக்குமாரசாமி , திருமலை சண்முகர் எதிர்சேவைக் காட்சி நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணியளவில் சண்முகர் அர்ச்சனை நடைபெற்றது. வேதமந்திரங்களும் திருப்புகழ் உள்ளிட்ட தமிழ் திருமறைகளை ஓதுவார் பாட திருமலைக்குமாரசாமிக்கும் திருமலை சண்முகருக்கும் தீப ஆராதனைகள் நடைபெற்றது.
திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தலைமை அர்ச்சகர் திருமேனிநாத பட்டர், அர்ச்சகர்கள் வீரபாகுபட்டர், ஹரிபட்டர், ராஜாபட்டர் ஆகியோர் சுவாமிகளுக்கு பூஜைகளை நடத்தினர். நள்ளிரவில் இரட்டை சப்பரத்தில் திருமலைக்குமாரசாமி, திருமலை சண்முகர் திரு வீதி உலா நடைபெற்றது. மண்டகப்படிதாரர்களான பண்பொழி தேவர் சமுதாயத்தினரும் ஏராளமான பக்தர்களும் திருமலைக்குமாரசாமியையும் திருமலை சண்முகரையும் உள்ளம் உருகி வழிபட்டனர்.