பெருவிரலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமாகாததால், இந்திய அணிக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பங்கேற்கமாட்டார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடரை அந்த அணி இழந்திருந்தது. இந்நிலையில் புனேவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைப்பெற்றுவருகிறது. தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காயத்துக்காக தையல் போடப்பட்டதால் வலைப்பயிற்சியின் போது முழுமையான உடல் தகுதியை மோர்கன் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
காயம் முழுமையாக குணமடையததால் கேப்டன் மோர்கன் அடுத்து நடைபெறும் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்கபோவதில்லை என தெரிவித்துள்ளார். அதே போல் அந்த அணியின் முன்னணி வீரரான சாம் பில்லிங்ஸும் காயத்தில் அவதியுறுவதால் நாளைய போட்டியில் பங்கேற்க போவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஓருநாள் தொடரிலும் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காயத்தால் அவதியுறும் வீரர்களுக்கு பதிலாக டேவிட் மலன் அல்லது லியம் லிவிங்ஸ்டன் ஆடும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள மஹராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நாளை (26.03.21) பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.