உலக கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தீவிர அரசியலில் ஈடுபட போகிறாரா?
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த பிறகு தோனி, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. முடிந்த ஜூலை 7 ஆம் தேதியுடன் தோனிக்கு 38 வயது நிறைவடைகிறது. இதுவே அவர் ஓய்வுபெறுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வயது ஒரு காரணமாக இருந்தாலும் அரசியல் ஈடுபாடு இருப்பதாலும் தான் ஓய்வு பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் தோனி. தனது திறமையாலும் கிரிக்கெட்டில் காட்டிய அதிரடியாலும் நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் இடையே மிகவும் பிரபலமானவர். ஏற்கனவே இளைஞர்களிடம் அதிக செல்வாக்குடன் இருக்கும் பாஜகவுக்கு தோனியும் இணைந்தால் மேலும் செல்வாக்கு அதிகரிக்கும் என்று அக்கட்சியினரால் எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த கடந்த லோக்சபா தேர்தலில் ஜார்க்கண்டில் உள்ள 14 தொகுதிகளில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இனி வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என பாஜக தரப்பு நினைக்கிறது. இதற்கு காரணம் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தியும் பழங்குடியினர் மத்தியில் வெறுப்பும் காணப்படுகிறது என்று கூறுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு இதையெல்லாம் பாஜக தரப்பு சரி செய்ய வேண்டியுள்ளது.
அரசியலில் நுழைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்
இந்நிலையில் ஏற்கனவே பாஜகவில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர், கிழக்கு டில்லியில் போட்டியிட்டு எம்.பி.யாகி விட்டார். அவரை போலவே தோனியையும் கட்சிக்குள் கொண்டு வரும் வேலைகளை பாஜக தரப்பு செய்ய துவங்கி விட்டது என்று கூறுகிறார்கள். டில்லி பாஜக எம்.பி.யான மனோஜ் திவாரி, தோனிக்கு நெருக்கமானவர் என்றும் தோனி அரசியலுக்கு வர அவரது மனதை இவரும் மாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் பாருங்கள்: அமித்ஷா போட்ட பக்கா பிளான்.! முக்கிய கட்சியின் கூடாரத்தை காலி செய்ய வியூகம்.!
கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கூட, அமித்ஷா தோனியை ஒரு முறை சந்தித்து பேசினார். அப்போது இருந்தே தோனி பாஜகவில் இணைவார் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபட துவங்கியது. ஏற்கனவே இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பாஜகவின் மூத்த நிர்வாகிகளிடம் பேசிய தோனி நடைபெற்று வரும் உலகக் கோப்பை முடியும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டதாக ஒரு செய்தி கசிந்து வருகிறது.
ஜார்க்கண்டில் தோனிக்கு வழங்கப்படும் பணி
நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பிறகு தோனி கட்சியில் சேரும் நிலையில் அவருக்கு ஜார்க்கண்டில் என்ன மாதிரியான வேலைகளை கொடுக்கலாம் என்றும் பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக கூறபடுகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் குறைந்தது 65 தொகுதிகளிலாவது ஜெயிக்க வேண்டும் என்று பாஜக தரப்பு விரும்புகிறது. இதில் ஒரு முக்கிய திட்டம் தான் தோனியை கட்சியில் சேர்ப்பதும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.