போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு! – துவங்கப்படுகிறதா பேருந்து போக்குவரத்து?

Photo of author

By Parthipan K

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (31ம்தேதி)
முடிவடைகிறது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 5வது கட்டமாக ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கள நிலவரத்தை பொருத்து அந்தந்த மாநில அரசுகளே ஊரடங்கை நீட்டிப்பது அல்லது முடித்துக்கொள்வது குறித்து முடிவுசெய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் பெரும்பாலான ஆட்சியர்கள் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரம், பேருந்து போக்குவரத்தை அனுமதிப்பது, வழிபாட்டு தலங்களில் மக்களை அனுமதிப்பது, கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிப்பது உள்ளிட்ட சில தளர்வுகளை அறிவிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

அதேநேரம் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக எந்த தளர்வும் வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று மாலை அல்லது நாளை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஊரடங்கு நீட்டிபப்பு, தளர்வு உள்ளிட்டவற்றை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகர மேலாண்மை இயக்குநர் போக்குவரத்து பணியாளர்களை பணிக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்

“நமது மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3584 பேருந்துகள் அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்றன. சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொது முடக்கம் செய்யப்பட்டுள்ளதால் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 1775 பேருந்துகளின் HFC மற்றும் FC ஜூனங மாதம் காலாவதியாகிறது. எனவே, மேற்கண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்ய Fitness Certificate வாங்க வேண்டி உள்ளதால் MTC(W), FC Unit-கள் மற்றும் RC Unit-களில் பணிபுரியும் பணியாளர்கள் இரண்டு நாளுக்கு ஒரு முறை (50% அடிப்படையில்) உடனடி பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் பணியாளர்கள் அனைவரும் கீழ்கண்ட நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்

  • பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும்
  • Hand Gloves கட்டாயம் அணிய வேண்டும்.
  • கைகளை அடிக்கடி Soap போட்டு கழுவ வேண்டும்.
  • Hand Sanitizer பயன்படுத்த வேண்டும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்த உத்தரவு பேருந்து சேவை துவங்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.