கோவையில் கோவிலருகே பன்றி இறைச்சி வீசிய மர்ம ஆசாமி – 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை

0
73

கோவையிலுள்ள வைசியாள் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசாமி மற்றும் ராகவேந்திரா சுவாமிகள் கோவில் உள்ளது

குறுகலான வீதியில் அமைந்துள்ள அந்த கோவில்களுக்கருகில் பழக்கடைகள், நகை பட்டறைகள் அதிகம் உள்ளன. அங்கு மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் ராகவேந்திர சுவாமிகள் கோவிலருகே ஒரு மர்ம ஆசாமி ஒரு ப்ளாஸ்டிக பையை வீசிவிட்டு சென்றார். அதில் பன்றி கறி இருந்துள்ளது. இதனால் சற்று நேரத்தில் அந்த இடம் பரபரப்பானது. இது குறித்து கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள் காவல்துறை இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ராகவேந்திரசுவாமி கோவில் தலைவர் ரங்கநாதன், வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் செயல் அலுவலர் பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

புகாரை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இறைச்சி வீசப்பட்ட 2 கோவில்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமியை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக சட்டம்-ஒழுங்கு காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 5 தனிப்படை காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

கோவிலருகே பூ விற்று கொண்டிருந்த பேபி என்பவர் சொன்ன தகவல்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் ஒத்து போனதால் இறைச்சி வீசியவர் அடையாளம் தெரிந்தது. அவர் பெயர் ஹரி என்று தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நேற்று காலை 10.30 மணிக்கு நடந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசாமியை மாலை 4.30 மணியளவில் கோவை மாநகர காவல்துறை கைது செய்துள்ளனர்.

இது குறித்து அவரிடம் கோவில் முன்பு எதற்காக இறைச்சியை வைத்தார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட ஹரி மீது இந்திய தண்டனை சட்டம் 295ஏ(மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்படுதல்)உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K