கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!
கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் படந்தாலுமூடு என்ற பகுதி சோதனைச் சாவடியில் வழக்கம்போல காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். உதவி ஆய்வாளர் வில்சன் அவ்வழியே வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினார். காரில் இருந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட சோதனையை தொடர்ந்த போது திடீரென காரில் இருந்த மர்ம நபர்கள் உதவி ஆய்வாளர் வில்சனை பலமுறை சுட்டதில் மார்பு, தலை மற்றும் கால்பகுதியில் குண்டு பாய்ந்து அங்கேயே சரிந்து விழுந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு மற்ற காவலர்கள் ஓடி வருவதற்குள் காரில் இருந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். அங்கிருந்த மசூதி வழியாக இருவர் தப்பிச் ஓடும் வீடியோவின் பேரில் கன்னியாகுமரியை சேர்ந்த தவ்பீக், ஷமீம் கைது செய்யப்பட்டு அவர்களின் புகைப்படமும் வெளியிடப்பட்டது.

வில்சனை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, மர்ம நபர்கள் யார் உதவி ஆய்வாளரை சுட காரணம் என்ன என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மர்ம நபர்கள் வந்த வாகனத்தின் எண்ணை போலீஸ் ஆய்வு செய்ததில் ஒட்டன்சத்திரம் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.
இச்சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு தென்மண்டல ஐஜி_யிடம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தப்பிச் சென்ற குற்றவாளிகள் கேரளாவில் தஞ்சமடைய வாய்ப்புண்டு எனவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.