நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியது… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு!!

Photo of author

By Sakthi

நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியது… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு…

 

நாங்குநேரி அருகே பள்ளி மாணவ மாணிவியான அண்ணன் மற்றும் தங்கை இருவரும் வீடு புகுந்து வெட்டப்பட்ட.சம்பவம் தற்பொழுது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

நாங்குநேரி அருகே அரசு பள்ளியில் பயிலும் சின்னதுரை என்ற மாணவரையும் சின்னத்துரையின் தங்கையையும் பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் சின்னதுரையின் வீடு புகுந்து இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

 

இதில் படுகாயம் அடைந்த சின்னதுரையும் அவருடைய தங்கையும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்பொழுது சின்னத்துரையும் அவருடைய தங்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

அண்ணன், தங்கை என இருவரும் தாக்கப்பட்டது  தொடர்பாக 17 வயதுடைய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும் 4 பேரும், 2 சிறார்களும் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் ” நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

 

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.

 

அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.