ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகம்?!

Photo of author

By Parthipan K

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 தொடர் முடிந்த நிலையில், தற்பொழுது டெஸ்ட் தொடர் விளையாடி வருகின்றது. இதில், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை இந்திய அணியும் வென்றன. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியை இந்திய அணியும் வென்றது. மூன்றாவது போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதில், வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மும்முரமாக உள்ளன.

ஆஸ்திரேலிய தொடருக்கு நெட் பவுலராக சேர்க்கப்பட்டு தமிழக வீரர் நடராஜன் அழைத்துச்செல்லப்பட்டார். வருண் சக்கரவரத்தி மற்றும் சைனிக்கு ஏற்ப்பட்ட காயத்தால் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடராஜன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்பொழுது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறியதால் நடராஜன் டெஸ்ட் அணியில் மாற்று வீரராக இடம்பெற்றுள்ளார்.

நடராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெள்ளைநிற ஜெர்சியுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு வெள்ளை நிற ஜெர்சியில் ஆடுவது பெருமையாக உள்ளதாகவும், அடுத்த சவாலுக்கு தயாராக உள்ளதாகவும் கேப்சன் கொடுத்து பதிவிட்டுள்ளார். மேலும், இன்டாகிராமில் நிறம் மாறினாலும் நோக்கம் மாறாது என பதிவிட்டுள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஜொலித்தது போல டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக ஆடுவார் என இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடாத ரோஹித் ஷர்மா தற்போது குணமடைந்து மூன்றாவது டெஸ்டில் களமிறங்க இருக்கிறார். இது இந்திய ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.