கொள்ளை முயற்சியின்போது தீப்பிடித்த ஏ.டி.எம்! ராசிபுரம் அருகே பரபரப்பு

0
128

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது ஏ.டி.எம் தீப்பிடித்தது. இந்நிலையில் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த தீ விபத்தில் ஏ.டி.எம்மில் இருந்த
6 லட்சம் ரூபாய் தீயில் கருகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராசிபுரம் அருகே
புதுச்சத்திரத்தில் தனியார் கல்லூரிக்கு முன்புறம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம் அமைந்துள்ளது.இந்த ஏ.டி.எம்மில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து உள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏ.டி.எம் மையத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைத்தனர்.மேலும் ஏ.டி.எம் உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர்.மேலும் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.இந்நிலையில் ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் விபரங்களை எடுக்க முயற்சி செய்யப்பட்டது.ஆனால் அந்த கேமரா வேலை செய்யவில்லை என தெரியவந்தது. அதன் பிறகு தனியார் கல்லூரியில் பொருத்தப்பட்ட சிசிடிவி புட்டேஜ்களை ஆய்வு செய்தபோது 4 பேர் ஏ.டி.எம் மையத்திற்கு வந்துள்ளது தெரியவந்தது.அதில் ஒருவர் வெளியே நின்றும் மற்ற மூவர் உள்ளே சென்று ஏ.டி.எம்மில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.மேலும் ஏ.டி.எம் இயந்திரத்தை வெல்டிங் வைத்து திறக்க முயன்றபோது தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ஏ.டி.எம் மையத்தில் ஏற்பட்ட இந்த தீயில் ரூபாய் 6 லட்சம் தீயில் கருகியது தெரியவந்துள்ளது.இதனை புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஏ.டி.எம் மையத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகொரோனாவால் நடந்த ஒரே ஒரு நன்மை! 2024 இலக்கை 100 நாட்களில் எட்டியது இந்தியா! அப்படி என்ன நன்மை தெரியுமா
Next articleசூறையாடும் விவசாயிகளின் உயிர்…??திருப்பூர் அருகே நடந்த பரிதாபம்??