ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
வீட்டுமனை திட்டங்களில் உண்டாகும் சர்ச்சைகளை களைவதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை சட்டம் 2016 நடைமுறையை மத்திய அரசு உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் தான் , தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட “தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்” இன்றுவரை செயல்பட்டு வருகிறது.
2016ல் உருவாக்கப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின்படி ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்யவும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.
குறிப்பாக, 5000 சதுர அடிக்கு மேல் உள்ள 8 நிலங்களை ஒன்றாக பதிவு செய்யும்பொழுது ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இதில் புகார்கள் கண்டுபிடிக்கப்பட்டால் புகார்களுக்கு ஏற்றவாறு அபராதங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அபராதங்களின் விவரங்கள் பின்வருமாறு :-
✓ மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், ஆவடி, தாம்பரம், வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி மாநகராட்சிகளில், தலா, 12,000 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
✓ சென்னை பெருநகர எல்லையில் வரும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி, கும்பகோணம், காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் தலா, 10,000 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
✓ மற்ற நகராட்சிகளில் வீடு, மனைகளுக்கு தலா, 6,000 ரூபாய், பேரூராட்சிகளில் தலா 4,000 ரூபாய், ஊராட்சிகளில் தலா, 3,000 ரூபாய் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.
இந்த தொகையை விதிக்கும் போது, மனைப்பிரிவு திட்டங்களில் அதன் மொத்த மதிப்பில் 2 சதவீதம்.. அடுக்குமாடி குடியிருப்பு என்றால், அதில் விற்கப்பட்ட வீடுகளின் மதிப்பில், 1 சதவீதம் ஆகியவற்றில், எது அதிகம் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்படும்” என்று ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி மாற்றப்பட்ட புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.