பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டத்தில் புதிய மாற்றம்!! ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்ட குடும்ப வருமானம்!!

Photo of author

By Gayathri

சமூக நலத்துறையின் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் படி வழங்கப்பட்ட வருகிறது. தற்பொழுது இதில் ஒரு புதிய மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த நலத்திட்டங்களுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகளில் ஒன்றான குடும்ப வருமானம் 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :-

சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும், அனைத்து திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.12 ஆயிரம் என நிர்ணயம் செய்து 1993-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த வருமான உச்சவரம்பு 2008-ம் ஆண்டு ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருந்தது.

மேலும், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் எந்திரம் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி 2016-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் , கடந்த ஜூன் மாதம் சட்டசபையில், சமூக நலன் மகளிர் உரிமை அமைச்சர், சமூக நலத் துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன் பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இது குறித்து, குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி ஆணை வழங்க வேண்டும் என்று அரசுக்கு சமூக நல ஆணையர் கோரிக்கை வழங்கியதை அடுத்து தற்பொழுது பெண் குழந்தைகள், பெண்கள் நலத்திட்டங்களுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்படுகிறது ” என அவர் தெரிவித்தார்.