தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் போட்ஸ்வானா வகை உருமாறிய கொரோனா, ஐரோப்பாவில் பரவியதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கிட்டேன் என்பது போல இப்போது பலர் பேசி வருகின்றனர். அதுக்கு காரணம் தடுப்பூசி போட்டாச்சி, அதனால் பாதிப்பு குறைவு என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.
வூகானில் கொரோனா வைரஸ் பரவியிருந்தாலும், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரசே அதிக பாதிப்பையும், உயிர்களையும் பறித்தது. அதற்குப் பிறகு வேறு எந்த புதிய வகையும் வராத நிலையில், தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அதி தீவிரமாக பரவக்கூடியது. குறிப்பாக, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு வீரியம் உள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகள் அச்சத்தில் உள்ளனர். காரணம் அடுத்த மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவில் கொரோனாவால் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது தான்.
போட்ஸ்வானா வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இங்கிலாந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், பெல்ஜியத்தில் ஒருவருக்கு போட்ஸ்வானா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவரை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்துவரும் மருத்துவத்துறையினர், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருக்கு யாரிடம் இருந்து பரவியது, அவர் எங்கெல்லாம் பயணித்தார் என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வைரஸ் பரவலைத் தடுக்காவிட்டால், உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது போன்று உயிரிழப்புகள் அதிகம் எற்படும் என மருத்துவத்துறையினர் அஞ்சுகின்றனர். அதனால், பொதுமக்கள் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.