தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பரவலாக மழை பெய்து வந்த சூழ்நிலையில், இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்து வருவதை காண முடிகிறது. அதிலும் கடந்த ஒரு வார காலமாக பல பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருகின்றது. இந்த சூழ்நிலையில், வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இந்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டிற்கு பெரிய அளவிலான மழைக்கான வாய்ப்பு கிடையாது என்றும், குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி வரையில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இவை தவிர வட கிழக்கு பருவ காற்று காரணமாக, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை 19ஆம் தேதி வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வட மாவட்டங்கள் மற்றும் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.