இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கி லாக்கரைப் பயன்படுத்துபவர்கள் அல்லது லாக்கரை வாடகைக்கு எடுக்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கான லாக்கர் விதிகளை பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி சில புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது மற்றும் அந்த புதிய விதிகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி லாக்கர் வைத்திருப்பவர்கள் ஜனவரி 1, 2023க்கு முன் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வங்கிகள் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களில் நியாயமற்ற விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஜனவரி 1, 2023க்குள் வங்கிகள் ஏற்கனவே இருக்கும் லாக்கர் வாடிக்கையாளர்களுடனான லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வங்கிகள் வாடிக்கையாளருக்கு லாக்கரை ஒதுக்கும்போது அந்த வாடிக்கையாளரிடம் வங்கி முத்திரையிடப்பட்ட காகிதத்தில் ஒப்பந்தம் செய்து கொள்கிறது. ஒப்பந்த பாத்திரத்தின் ஒரு நகல் வாடிக்கையாளரிடமும், அசல் வங்கியின் கிளையிலும் இருக்கும்.
வங்கியின் லாக்கரை அணுகும்போது எல்லாம் இதுகுறித்து எச்சரிக்கும் விதமாக குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக வங்கி தெரியப்படுத்தும். அந்த செய்தியில் லாக்கரை அணுகிய தேதி, நேரம் மற்றும் அங்கீகரிக்கப்படாத லாக்கர் அணுகல் போன்ற பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். இதுகுறித்து பிஎன்பி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், “ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, புதிய லாக்கர் ஒப்பந்தம் டிசம்பர் 31, 2022க்கு முன் செயல்படுத்தப்படும், ஒப்பந்தம் செய்யாதவர்கள் இந்த தேதிக்குள் செய்துகொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.