உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது, இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது.
இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகிறது. ஆனால் நமக்காக போராடும் இந்த ஹீரோக்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு ராணுவத்தின் ஒரு பிரிவான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்துடன் இணைந்து டாக்டர்களுக்கு என பிரத்தியேக கவச உடையை தயாரித்துள்ளது. இந்த உடையில் கிருமிகள் புகாத வண்ணம் அனைத்து பகுதிகளையும் மூடிக்கொள்ளும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா போன்ற கொடிய வியாதியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது டாக்டர்களின் பாதுகாப்பை இந்த கவச உடைய உறுதி செய்கிறது என்று மருத்துவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.