தேசிய மொபைல் கண்காணிப்பு முறை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரியும் தொழிலாளர்களின் வருகை பதிவானது மொபைல் போன்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருவதற்கு முக்கிய காரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் செயல்பாட்டில் உள்ள வெளிப்படையின்மை தான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது, தனிப்பட்ட பயனாளிகளின் பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளில் உள்ள பணியாளர்களின் வருகை பதிவினை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் பின்பற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம், குறை தீர்ப்பாளர்களிடம் தங்களுடைய குறைகளையும் புகார்களையும் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது தவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பயனாளிகள் தங்களது குறைகளை இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கான மொபைல் செயலியானது தற்பொழுது பல்வேறு மொழிகளில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும், அதில் உங்களுடைய குறைகளை தெரிவிக்க விருப்பத்தேர்வு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.