தேனியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேனியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கிலும் நடைபெற்றது.
இதில் பேசிய தேனி ஆட்சியர், தமிழக அரசு வழிகாட்டுதல்படி தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல்,
அடிக்கடி கைகழுவுதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது ரூ.500 அபராதம் விதித்திட வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.