2012 ஆம் ஆண்டு OYO நிறுவனத்தை ரித்தேஷ் அகர்வால் நிறுவினர். இந்த நிறுவனம் உலகத்தில் உள்ள 80 நாடுகளில் 800-க்கும் மேற்பட்ட நகரங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட OYO ரூம்களை இந்தியாவில் அதிக அளவு இளைஞர்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.
பெரும்பாலான ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது OYO அறைகள் குறைந்த வாடகை மற்றும் பாதுகாப்பானதாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிலையில் தற்பொழுது உலகம் முழுவதிலும் அதிக அளவு இந்த OYO அறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு பயன்படுத்தப்பட்டு வரும் இந்த OYO அறைகள் , இளைஞர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு கலாச்சாரத்தை சீர்குலைத்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், இந்நிறுவனமானது புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த விதிமுறைகளின் மூலம் திருமணம் ஆகாத தம்பதியினருக்கு அனுமதி கிடையாது என்றும் புதிய கொள்கையின் படி அனைத்து தம்பதிகளும் செக்கிங் செய்யும்போது தங்களுடைய அடையாள அட்டைகள் மற்றும் தங்களுடன் வரக்கூடிய உறவினரின் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இவை மட்டுமல்லாது ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும் கட்டாயமாக ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் முன்பதிவுகளை நிராகரிக்கும் உரிமையை நேரடியாக OYO ஹோட்டல்களுக்கு வழங்கி இருப்பதாகவும் OYO வட இந்தியாவின் பிராந்திய தலைவர் பவாஸ் சர்மா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், இந்தக் கொள்கையின் தாக்கம் அவ்வபோது மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் தற்பொழுது இந்த புதிய விதிகளானது மீரட்டில் துவங்கப்பட்டிருப்பதாகவும் அங்கு வெற்றி பெற்றால் அதனை மற்ற நகரங்களிலும் அமல்படுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக, இது குறித்து பலரும் பல விதமாக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வரும் தருணத்தில், OYO நிறுவனமானது வாடிக்கையாளர் நம்பிக்கையை தக்கவைத்து கொள்ளுமா இல்லையா என்ற கேள்விகளும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.