இலங்கையை வீழ்த்தி அரையிறுதி கனவை பிரகாசமாக்கிய நியுசிலாந்து!
நியுசிலாந்து இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் சுற்றுகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டும் கைவிடப்பட்டும் ரசிகர்களை ஏமாற்றினர். இதற்கிடையில் இன்று நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதிய போட்டியில் நியுசிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் க்ளென் பிலிப்ஸ் 104 ரன்கள் சேர்த்தார். அவர் வழங்கிய மூன்றுக்கும் மேற்பட்ட கேட்ச்களை இலங்கை வீரர்கள் தவறவிட்டனர். இதனால் அவர் நிலைத்து நின்று விளையாடி அணியை மீட்டார்.
அதன் பின்னர் 168 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி 24 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் நிதானமடைந்து விளையாடினாலும், 102 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நியுசிலாந்து அணியின் ட்ரண்ட் போல்ட் சிறப்பாக வீசி 4 விக்கெட்களை அதிகபட்சமாக கைப்பற்றினார்.
நியுசிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கியுள்ளது. சிறப்பாக விளையாடி வெற்றிக்குக் காரணமாக அமைந்த க்ளென் பிலிப்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.