இந்திய அணிக்கு இரண்டாவது தோல்வி.

Photo of author

By Parthipan K

[spacing size=””]

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.

இரு அணிகளும் தாங்கள் ஆடிய முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியிடம் தோல்வியுற்ற நிலையில், வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த ஆட்டத்தை தொடங்கின.

இந்நிலையில், துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திணறி வந்த நிலையில் இந்திய அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இந்திய அணியில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷான் கிஷன் மற்றும் சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் ஓப்பனராக களமிறங்கிய இஷான் கிஷன் 4 ரன்களுக்கு அவுட் ஆகிய நிலையில், அடுத்து வந்த ஆட்டக்காரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி 14.3 ரன்களில், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

நியூசிலாந்து அணியில் அதிகப் பட்சமாக டேரில் மிட்சேல் 49 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் சேர்த்தனர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
அபாரமாக பந்து வீசி, 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷ் சோதி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்