ஆருத்ரா வழக்கில் அடுத்த அதிரடி!பொதுமக்களின் முதலீடுகளைப் பெற்ற 256 ஏஜெண்டுகள் கண்டுபிடிப்பு!
ஆருத்ரா வழக்கில் அடுத்த அதிரடி, பொதுமக்களின் முதலீடுகளைப் பெற்ற 256 ஏஜெண்டுகளை கண்டறியப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியான ஹரீஷ் பாக்ஸிங்கில் சிறந்து விளங்கியதாகவும் 150 க்கும் மேற்பட்டோருக்கும் அவர் பயிற்சி அளித்ததும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 10 பேர் கைது செய்யப்பட வேண்டிய உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் 130 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அடுத்த ஆறு மாதத்திற்குள் ஆருத்ராவில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 100கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள், 6கோடி பணம், 4கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டு, 130 சொத்துக்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி 1லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து 2400 கோடி பெற்று மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கு தமிழகத்தையே உலுக்கியது.
இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக நிர்வாகி ஹரிஷ், மைக்கேல் ராஜ் உட்பட 13 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். துபாய் நாட்டில் தலைமறைவாக உள்ள இயக்குனர் ராஜசேகர் உட்பட பலரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறிப்பாக கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள்,ஆவணங்கள், நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் பணிகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை இவ்வழக்கில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கணக்குகளை முடக்கி இருப்பதாகவும், 4 கிலோ தங்க நகைகளை மீட்டிருப்பதாகவும், 6 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து பல கோடி மதிப்பிலான 130 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வழக்கில் ஏஜெண்டுகள் முக்கிய பங்காற்றி இருப்பதாகவும், இதுவரை 256 ஏஜெண்டுகள் கண்டறியப்பட்டு அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணிகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள இயக்குனரில் ஒருவரும், பாஜக நிர்வாகியுமான ஹரிஷ் பாக்ஸிங்கில் சிறந்தவராக விளங்கியதும், ஜிம் நடத்தி 150க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து வந்ததால், இவரை கைது செய்வதில் பெரும் சவாலாக இருந்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக விபி.என் ஆப்பை பயன்படுத்தி வாட்ஸ் அப் கால் மூலமாக மட்டுமே பேசி வந்ததால் இவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் முடக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர், அடுத்த 6 மாதத்திற்குள் பொதுமக்கள் இழந்த பணம் திருப்பி கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.