தூக்கில் போடும் பணத்தை வைத்து தான் மகளின் திருமணம்! ஹேங்மேன் உருக்கம்!

Photo of author

By Parthipan K

தூக்கில் போடும் பணத்தை வைத்து தான் மகளின் திருமணம்! ஹேங்மேன் உருக்கம்!

நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் வரும் ஜனவரி 22 ஆம் தேதி திஹார் சிறையில் வைத்து தூக்கில் போட இருக்கிறது சிறை நிர்வாகம்.

2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நள்ளிரவு நேரத்தில் மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து  இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் 16 வயது மைனர் சிறுவன் ஒருவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்கு தண்டனையும் விதித்தது நீதிமன்றம்.  

அதில் ஒரு குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். 2013 ல் அறிவிக்கப்பட்ட தண்டனை பல மேல் முறையீடுகளால் 6 ஆண்டுகளாக தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் விரைந்து தண்டனை அளிக்க வேண்டும் என நிர்பயாவின் தாய் ஆஷா தேவி மகளிர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். இதையடுத்து இப்போது உயிரோடு இருக்கும் மற்ற நால்வருக்குமான தண்டனை வரும்  22 ஆம் தேதி நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையில் ஹேங்மேன் மற்றும் தூக்குப் போடும் கயிறு  இல்லாததால் மீரட்டில் இருந்து பவான் ஜல்லார்ட் என்ற ஹேங்மேனும் நான்கு தூக்குக் கயிறுகளும் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய ஹேங்க் மேன் பவான் இந்த 4 பேரையும் தூக்கிலிட்டால் தனக்கு  நபருக்கு 25,000 ரூபாய் வீதம் ஒரு லட்சம் சம்பளமாகக் கிடைக்கும் எனவும் அதை வைத்து தான் தனது மகளின் திருமணத்தை முடிக்க இருப்பதாக அவர் சொல்லியுள்ளார்.

இதுபோல தண்டனை இல்லாத காலங்களில் அவருக்கு மாத சம்பளமாக 5,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.

நிர்பயா, கொலை வழக்கு, தூக்கு தண்டனை, nirbaya, murder case, hang sentence