நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்! டெல்லி திஹார் சிறையில் பாதுகாப்பு படையினர் குவிப்பு!!
மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் கைதான நால்வருக்கு இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு பின்னர், மருத்துவ சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்த வழக்கில் மொத்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் சிறார் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து மற்ற ஐந்து பேரையும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் தற்கொலை செய்து கொள்ள மீதி நால்வரான வினய் சர்மா, பவன்குப்தா, முகேஷ்சிங், அக்ஷய்குமார் சிங் ஆகிய நால்வருக்கு நீதிமன்றத்தின் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சார்பாக மேல் முறையீடு மற்றும் கருணை மனுவை தொடர்ந்து அளித்த காரணங்களால் சட்ட காரணங்களால் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இவ்வழக்கில் ஏற்கனவே மூன்று முறை தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து நிர்பயா குற்றவாளிகளில் இருவரான முகேஷ் சிங் மற்றும் அக்ஷய்குமார் சிங் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, சட்டரீதியான வழிமுறை எல்லாம் முடிந்துவிட இறுதியாக தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. இதில் அக்ஷய் குமாரின் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து குடியரசுத் தலைவரிடம் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. கற்பழிப்பு சம்பவத்தின் போது தான் டெல்லியில் இல்லை என்று பவன்குப்தா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றம் இவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து, இன்று காலை 5:30 மணிக்கு தூக்கில் போடுவது உறுதியானது. இதனையடுத்து தூக்கு தண்டனைக்கான ஏற்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் சட்டப்படி செய்தது. சிறையின் வெளியே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, இன்று காலை சரியாக 5:30 மணிக்கு நால்வரும் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் நிர்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.