நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் தான் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் பயிலும் சில மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தவறான பாதையில் பயன்படுத்த முயன்றதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆடியோ ஒன்று வெளியானது.
இதனையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் உடனடியாக கைதும் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் முதல் பல முக்கிய அரசியல்வாதிகள் வரை தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து வழக்கின் தீவிரம் கருதி இந்த வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் நிர்மலா தேவிக்கு உடந்தையாக செயல்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிபேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூவர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் விபச்சார தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர்கள் மூவர் மட்டும் தான் குற்றவாளிகள் என கூறி சிபிசிஐடி 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இவர்கள் மூவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 26ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் கருப்பசாமி மற்றும் முருகன் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இதனால் தீர்ப்பை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் மற்ற இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.