இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தாலும் சட்டமன்ற தேர்தல் ஒரே நாளில் நடப்பது இல்லை. மத்தியில் பாஜக அரசு வந்த பின் தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறது. ஆனால், மாநில அரசுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்க துவங்கியது முதலே பல அதிரடியான திட்டங்களை கொண்டு வர துவங்கியது. குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாவற்றையும் செய்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக ஆதரவு ஆளுநர்களை நியமிப்பது, அதன் மூலம் அரசுக்கு தொல்லை கொடுப்பது என பல விஷயங்களையும் செய்து வருகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை திமுக கடுமையாக எதிர்க்கிறது. நேற்று சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடந்த விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன் ‘ஒரே நாடு ஒரே தேர்தலை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். நாட்டின் நலனுக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இதற்கான நடைமுறையை குடியரசு தலைவர் தொடங்குவார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு 12 ஆயிரம் கோடி அளவு நிதி மிச்சமாகும். நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 1.5 சதவீதம் உயரும். அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களுக்கான அடிப்படை விஷயங்களை செய்ய முடியவில்லை’ எனப்பேசினார்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்று தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். ஆனால், இன்றைய முதல்வர் ஸ்டாலின் தந்தையார் வழியில் செல்லாமல் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறார்’ என பேசியிருக்கிறார்.