மோடியின் பெருமை பேசிய நிர்மலா சீதாராமன்.. பாதியில் எழுந்து சென்ற பெண்களால் கடுப்பான சம்பவம்..!!
தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேர்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்துள்ளார். அதன்படி சிதம்பரத்தில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து நிர்மலா சீதாராமன் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு மட்டுமல்ல ஒரு முதல்வராக குஜராத் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றி கொடுத்தவர் தான் பிரதமர் மோடி. அதேபோல தமிழ்நாட்டிற்கும் நிறைய திட்டங்களை மோடி செயல்படுத்தியுள்ளார்.
சிதம்பரம் தொகுதி முந்திரிக்கு பெயர் போனது. இங்கு பெண்கள் அதிக அளவில் பங்களித்து வருகிறார்கள். முந்திரிக்கு சரியான விலை கிடைக்கிறதா என்பதை பார்த்தால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து நல்ல லாபம் பார்க்க முடியும். ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் இந்த தொகுதியின் வளர்ச்சிகாக எதுவும் செய்யவில்லை என்பது தான் வேதனை அளிக்கிறது.
தற்போது திமுக அங்கம் வகித்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழலுக்கு பெயர் போனது. அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வருகிறார்கள். இதனால் சீர்குலைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இதை சரிசெய்துள்ளார்” என்று பேசினார்.
இப்படி மோடி செய்த சாதனைகளையும் அவரின் பெருமைகளையும் மிகவும் சீரியஸாக நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த சில பெண்கள் பாதியில் எழுந்து சென்றனர். அப்போது கடுப்பான நிர்மலா சீதாராமன் தாய்மார்களே போகாதீங்க. ஒரு ரெண்டு நிமிஷம் தான் பேசி முடிச்சிடறேன் என்று கூறியுள்ளார்.