மறு தேர்வுக்கு வாய்ப்பே கிடையாது! அதிரடியாக அறிவித்த அரசு!!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கல்வி நிலையங்களில் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது.
கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து அதற்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே ஹிஜாப் தடை தொடர்பாக கர்நாடகா முழுவதும் போராட்டம் வெடித்தது.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் யாரும் மதத்தை வெளிப்படுத்தக்கூடிய ஆடைகளை அணிந்து செல்லக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் கர்நாடகாவில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலை தணிந்தது.
ஹிஜாப் போராட்டங்களுக்கு மத்தியில் கர்நாடகாவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரிகளில் செய்முறை தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களால் தேர்வு எழுத முடியாமல் போனது.
இதையடுத்து முதல் தடவை செய்முறை தேர்வு எழுத முடியாத மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்து தேர்வு எழுத முடியாமல் சென்ற மாணவிகளுக்கு மறுதேர்வு வழங்க வாய்ப்பு வழங்கப்படாது என கர்நாடக மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.