ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க கூடாது! எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

0
110

தமிழ்நாட்டில் தற்சமயம் ஆக்சிசன் பற்றாக்குறை இல்லாத காரணத்தால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை நீட்டிக்க தேவையில்லை என்று தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய்தொற்று பரவலின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக இருந்ததால் தமிழக அரசால் மூடி சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கும், அதில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்குமாறும், அந்த நிறுவனமான வேதாந்தா சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி முதல் நாளை வரையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், நாளையுடன் இந்த கால அவகாசம் முடிவடைய இருக்கின்ற நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பாக நேற்றைய தினம் புதிய இடைக்கால மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள். அதில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்பட்ட இதற்கு முந்தைய அனுமதியை மேலும் ஆறு மாத காலங்கள் நீட்டித்து உத்தரவு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார் தமிழ்நாட்டில் போதுமான அளவு ஆக்சிஜன் இருக்கின்றது. தற்சமயம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாத காரணத்தால், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கான அனுமதி வழங்க தேவையில்லை அதோடு அந்த ஆலையை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமை அன்று ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடரலாம் என்று அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.