நிலத்தினுடைய உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாக திகழ்வது பட்டா. புதிதாக நிலம் வாங்கும் பொழுது அல்லது பல ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலத்திற்கு பட்டா வாங்க/ மாற்றப்பட வேண்டும் என்றால் அதனை தாசில்தார் ஆபீஸ்க்கு சென்று பெறுதல் என்பது வழக்கமான ஒன்று.
2019 ஆம் ஆண்டு தமிழக அரசு தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யக்கூடிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆனால் இது சரிவர நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புர புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் திட்டத்தின் பயன்கள் :-
மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புர புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இணைய வழி சேவை மூலம் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் நிகழ்நிலைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுபவை என்பதால் இத் தகவல்களை பெற எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லைபட்டா மாறுதல் மனுக்களை மாநிலத்தில் உள்ள எந்தவொரு பொது சேவை மையத்தின் உதவியுடனும் அனுப்ப முடியும்.
இதற்கு சேவை கட்டணமாக 60 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும், இந்த மின்னணு சேவை மூலம், புலப்பட நகல்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவை மட்டுமின்றி இதன் மூலம், புதிதாக நிலம் வாங்குகிறோம் எனில் அந்த நிலத்தினுடைய பட்டா யாருடைய பெயரில் இருக்கிறது அதன் அளவு மற்றும் முழு விவரங்களையும் இத்திட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு :-
பட்டா, சிட்டாவில் பெயர்களை நீங்கள் மாற்றம் செய்ய முடியும். ஆனால் இதனை நீங்கள் ஆன்லைன் மூலம் செய்ய முடியாது. உங்கள் பகுதியில் உள்ள தாலுகா அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பட்டா பரிமாற்ற படிவத்தை வாங்கி, படிவத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கையொப்பமிட்ட விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் 15 முதல் 30 நாட்களுக்குள் புதிய பட்டாக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒருவேளை திட்டமானது முழுமை அடைந்த பின்பு எளிதாக பட்டா மற்றும் சிட்டா குறித்த அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் நம்மால் மாற்றிக் கொள்ள முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.