உலகை அச்சுறுத்தும் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
உலக நாடுகள் தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க புதிய ஆயுதங்களை தயாரித்து வருகின்றன. அதில், வட கொரியா தயாரித்து நடத்தும் ஆய்வுகள் மட்டும் தனித்துவம் பெருவதுடன் உலக நாடுகளை அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது. அணு வெடிகுண்டுகளையும், அவற்றை தாங்கி செல்லும் ஏவுகணை சோதனைகளையும் அடிக்கடி செய்கிறது. இதனால், அண்டை நாடுகளாக தென் கொரியா, ஜப்பான் மட்டுமல்லாது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தூக்கத்தை தொலைத்து வட கொரியாவை கண்காணித்து வருகின்றன.
இந்த 2022 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கிம் ஜாங் உன், வழக்கத்திற்கு மாறாக, அணு ஆயுதங்கள், அமெரிக்கா குறித்து ஒருவார்த்தை கூட பேசாதது பெரும் கவணத்தை ஈர்த்தது. உணவு தயாரிப்பு, பொருளாதாரத்தை உயர்த்துவது குறித்தே அவர் பேசியதாக அந்நாட்டு செய்தி ஊடகமான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டதால், அண்டை நாடுகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டன.
இந்நிலையில், நேற்று ஏவுகனை சோதனை நடத்தியதாக தென் கொரியா குற்றம் சாட்டியது. இதனை ஜப்பானும் உறுதி செய்த நிலையில், அதுகுறித்த அறிவிப்பை கேசிஎன்ஏ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதலாவது ஆயுத சோதனையாக, அதிவேகமாக சென்று இலக்கை தாக்கி அழிக்கும் சூப்பர்சோனிக் ஏவுகனை ஏவி வெற்றிகரமாக சோதனை நடைபெற்றதாக தெரிவித்துள்ளது. 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை விமானத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம் என்றும், பல்வேறு அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டுள்ள எரிபொருள், குளிர்காலத்திலும் சிறப்பாக செயல்படும் என்றும், எந்த சூழ்நிலையிலும் சரியாக இயங்கும் தன்மை கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும், எவ்வளவு வேகத்தில் ஏவுகணை சென்றது என்ற விவரத்தை கேசிஎன்ஏ ஊடகம் வெளியிடவில்லை. மற்ற நாடுகளாலும் வேகத்தை கணிக்க முடியவில்லை. ஹைப்பர்சோனிக் என்பது ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியதாகும்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதே அடுத்த ஐந்தாண்டு இலக்கு என்று கடந்த ஆண்டு வட கொரியா அறிவித்த நிலையில், இரண்டாவது முறையாக சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.