தமிழக அரசியலில் பாமக உட்கட்சி விவகாரம் தான் தற்போது ஹாட் டாப் என நாள்தோறும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில் மருத்துவர் ராமதாஸ் தனக்கான ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது எனவும் இனிமேல் நிறுவனரான எனக்கே அனைத்து அதிகாரமும் உண்டு என அவர் களத்தில் இறங்கி அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை நீக்கியும், தனக்கான ஆதரவாளர்களை நியமித்தும் வருகிறார். அந்த வகையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் சிலர், பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் என பலரும் மாற்றப்பட்டு உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பாட்டாளி சமூக ஊடகப்பேரவை தலைவராக இருந்தவர்களை நீக்கி தொண்டி ஆனந்தன் என்பவரை தலைவராக நியமித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சோழன் குமார் வாண்டையார் தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்தித்தது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது.
அதற்கு காரணமாக பாட்டாளி சமூக ஊடகப்பேரவையை கட்டமைத்ததில் இவருடைய பங்கு அதிகம் எனவும், சிலரின் தூண்டுதலால் குறிப்பாக தற்போது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளராக செயல்படும் சிலரின் தூண்டுதலால் அவருடைய பதவியை வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளனர். இதனால் பாஜகவிற்கு சென்ற அவர் திடீரென்று மருத்துவரை சந்தித்தது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சோழன் குமார் வாண்டையாருக்கு பாட்டாளி சமூக ஊடகப்பேரவை ஒருங்கிணைப்பாளர் பதவியை மருத்துவர் ராமதாஸ் வழங்கியது விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து பாட்டாளி சமூக ஊடகப் பேரவை கூட்டத்தை நடத்தினார். அடுத்த நாளே மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாட்டாளி சமூக ஊடகப்பேரவை தலைவர் தொண்டி ஆனந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார் உள்ளிட்டோர் ஊடகத்தில் எவ்வாறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் இனிமேல் தான் அன்புமணி ராமதாசுக்கு எதிரான செயல்பாடுகள் வேகமெடுக்கும் என்றும் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் தான் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேலம் அருள் எம் . எல் . ஏ பேச்சும் அமைந்தது என்று கூறப்படுகிறது.
இதுவரை அன்புமணி ராமதாஸ் தரப்பு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமை பண்பு இல்லாதவர் என்ற குற்றசாட்டை மட்டுமே மருத்துவர் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பினால் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.